Wednesday, August 25, 2010

Thiyaanam

தியானமா, சூன்யமா?


உலகில் பல பல தியானங்கள் நடக்கின்றன.பெரிய பெரிய கம்ப்யூட்டர் கம்பனிகளிலும், வேலை திறனைக் கூட்ட தியானத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகமாக தியானங்கள் செய்ய ஊக்குவிக்கப் படுகிறார்கள். பெரும் பணக்காரர்களும் அமைதியைத் தேடி தியானம் செய்கிறார்கள். பிரபலமான சினிமா நடிகர்களும் தங்கள் பிஸி வாழ்க்கையை விட்டு தியானம் செய்யப் போகிறார்கள். இந்த நாட்டத்தைப் பயன்படுத்தி,பல நவீன குருக்களும் தியான சாலைகளும் அதிகமான பணத்தையும் வசூல் செய்கிறார்கள்.

நம்முடைய சமுதாயம் ஓடிக்கொண்டே இருக்கும் மக்களைக் கொண்டது. விடிவு முதல் அடைதல் வரை ஒரே ஓட்டம் தான். தொடர்ந்து அலுவலாகவும், பதட்டத்தோடும் இருப்பது நம் உடலைப் பாதித்து, பல நோய்களைக் கொண்டு வருகிறது. பதட்டத்தை விட்டு விட தியானம் மருந்தாகக் கூறப் படுகிறது.


அலசடிப் படுகின்ற மனத்தை கட்டுப்பாடுக்குக் கொண்டுவர தியானம் அவசியம் எனபது எல்லோருக்கும் தெரிகிறது. மனதின் சிந்தனைகளை எல்லாம் கட்டுப்படுத்தி, தேவையில்லாத, நம்மைக் கறைப்படுத்துகிற நினைவுகளை அப்புறப்பபடுத்தி, நிர்மலமான் மனதை அடைவது தியானமாகும்.

மனதை சூன்யமாக்க முயற்சிப்பது இயலாத காரியம். இது நல்ல பழக்கமும் கிடையாது. பல தியான பயிற்சிகளில், ஏதாவது ஒரு குறிப்பிட்ட வார்த்தையையோ, பொருளையோ,மனத்தில் கொண்டுவந்து, அதில் முழுக் கவனம் செலுத்தும் படி சொல்லப்படுகிறார்கள். ஆனால், அர்த்தமில்லாத வார்த்தைகளையோ, பொருளையோ, நாம் தியானத்திற்கான மையமாய் வைக்கும் போது, நாம் தேவையில்லாத வலைகளில் மாட்டிக்கொள்ள முடியும்.


வெறுமையாய் இருந்த ஒருவனின் வாழ்க்கையில் அவனை விட்டுப் போன அசுத்த ஆவி தன்னிலும் பொல்லாத ஏழு ஆவிகளைக் கூடிவந்து, குடியிருந்ததாம்- லூக்கா 11 : 23 - 26 .ஆம்.நம் மனது வெறுமையாக இருக்கும் என்றால் அதனை பிசாசு பிடித்துக்கொள்வான். An idle mind is the devil 's workshop எனபது பழமொழி.

'கிறிஸ்தவ தியானம்' என்றால் என்ன?

கிறிஸ்தவ தியானம் எனபது, தேவனின் வசனத்தைத் திரும்பத் திரும்பத் வாசித்து, அதன் அர்த்தத்தை யோசித்து, அதின் பல்வகை உண்மைகளை ஆண்டவர் நமக்கு வெளிப்படுத்த, அவற்றை நம் சொந்தமாக்கிக் கொள்ளும் அனுபவமாகும்.
ஆண்டவரின் பிள்ளைகளான நாம் அவரின் வேதத்தை தியானிக்க வேண்டும். ஆண்டவரின் பிரசன்னத்தை நாடி, அதில் நாம் பிரியப்பட வேண்டும்.

ஏனோக்கு தேவனோடு எப்போதும் இருந்ததினால் அவரால் எடுதுகொள்ளப்பட்டார் - ஆதி 5 : 24 . தியானத்தை தன் வழக்கமாகக் கொண்டிருந்த ஈசாக்கு நல்ல மனைவியைக் கண்டடைந்தான் - ஆதி 24 : 63 . நாற்பது நாள் ஆண்டவரின் பிரசன்னத்தில் திளைத்து இருந்த மோசே அருமையான கற்பனைகளைப் பெற்றுக்கொண்டார் - யாத் 24 :18 .கர்த்தரின் வசனத்தை இரவும் பகலும் தியானித்த யோசுவா அருமையான தலைவரானார் - யோசுவா 1 : 8 .நாட்டை ஆண்ட தாவீது ராஜா, தேவையில்லாதவற்றை நாம் தவிர்த்து, கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கச் சொல்கிறார் - சங்கீதம் 1 :2 .

நாம் வேதத்தை தியானம் செய்யும் முன்பாக சற்று நம் மனதை ஒருமுகப் படுத்த வேண்டும். நம் மனதில் உள்ள கவலைகளை ஆண்டவரிடம் சொல்லி, அவரின் சமாதானத்தினால் நிறையப்பட வேண்டும் - பிலி 4 :6 ,7 .தியான வாழ்வுக்கு ஏசுவே நம் முன்மாதிரி - மாற்கு 1 :35 . இந்த வசனத்தில் இயேசு தன் ஜெபத்திற்கு தெரிந்துகொண்ட நேரம் மற்றும் இடம் பற்றிப் பார்க்கிறோம். நாம் நன்கு விழிப்பாக இருக்கக் கூடிய நேரத்தை தியானத்திற்கு தெரிந்து எடுக்க வேண்டும். நம் சிந்தனைகளை சிதறப் பண்ணாத ஒரு இடத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வாஞ்சையோடு ஆண்டவரின் வசனத்தை வாசித்து தியானம் பண்ண வேண்டும். ஆண்டவர் நமக்கு வெளிப் படுத்தும் புதிய உண்மைகளை எழுதி வைப்பது நல்லது. அந்த உண்மைகளை நம் வாழ்வில் நடைமுறைப் படுத்தி, பின் அதை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் - எஸ்றா 7 :10

நாம் நம் அனுதின வாழ்வினை தேவனின் வசன தியானத்தோடு துவங்கி,, தியானத்தோடு முடிப்போமானால், நாம் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் உற்சாகமான வாழ்வு நடத்துவோம்.நம் படிப்பை / வேலையை நன்றாகச் செய்வோம். நமக்கும் பிறருக்கும் பயனான வாழ்வை நடைமுறைப் படுத்தி, பிறருக்கும் அறிமுகம் செய்வோம்.

P . ஜெபராஜ், UESI ஊழியர், சென்னை.

தியானம்

தியானத் தொர்பு இருக்கிறதா?

அவசரமாக கிளம்புவதற்காக சட்டையை 'அயர்ன்' பண்ணிக் கொண்டு இருந்தேன். திடீரென, சூடு குறைந்து, சட்டையின் கசங்கல்கள் அப்படியே இருந்தது. ஏன் என்று பார்த்தால், நான் தெரியாமல் வயரை அசைததில், 'அயர்ன்' வயர் தொடர்பு போயிருந்தது. அதைச் சரி செய்து, என் வேலையை முடித்தேன்.

ஆண்டவர் என்னோடு பேசினார், "நீயும் என்னோடு உள்ள தொடர்பைத் தவற விட்டு விட்டால், அனலில்லாமல் இருப்பாய். வாழ்வின் கசங்கல்கள் அப்படியே இருக்கும். உன் உள்ளே உள்ள சுருக்கங்கள் வெளிஉலகுக்கும் தெரியவரும். செயலில், உறவுகளில், குளிர்ந்து இருப்பாய். உன்னால் பிறருக்கு ஆண்டவரின் அனலைக் கொடுக்க முடியாது.என்னோடு உள்ள உன் தொடர்பு நிலைத்ததாய் இருக்கட்டும்".

ஆண்டவரோடு நம் தொடர்பு எப்படி இருக்கிறது? இரவும் பகலும் நாம் அவரைத் தியானிக்கிறோமா? அவரில் நாம் கொள்ளும் தியானம் நம்மில் அனலைத் தந்து, நாம் பிறருக்கு அனலைக் கொடுக்கவும் உதவும்.

P . ஜெபராஜ், UESI ஊழியர், சென்னை.