அரட்டை - ஆனந்தமா? ஆபத்தா?
நலந்தரும் அரட்டையா?
'சும்மா' என்ற வார்த்தை, தமிழில் சும்மா சும்மா வருகிறது. நண்பனிடம் என்ன பேசினாய்? 'சும்மா பேசினேன்!' சிநேகிதியின் போன் காலில் என்ன செய்தி ? 'சும்மா பேசினேன்!' (சும்மா கதையளக்காதே, விசயத்துக்கு வா என நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது )
கல்லூரி வளாகங்களில் அரட்டைக் கச்சேரிக்கேன்றே சில இடங்களும், பல நபர்களும் உண்டு. கேண்டீனிலும், மரத்தடியிலும்,பூங்காவின் ஓரமான பகுதிகளிலும் மாணவரும் மாணவியரும் கூடிக் கூடிப் பேசுவது சாதாரணக் காட்சிகள். ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் எனபது தான் முக்கியம். பாடங்களைப் பற்றிப் பேசும் மாணவர்களைப் புத்தகப் புழு என்று ஒதுக்கிவிடுவார்கள். பக்தி, கடவுள் என வாயெடுத்தால், சாமியார் பட்டம் கட்டி விடுவார்கள். அப்படிஎன்றால், அவர்கள் என்னத்தைப் பேசுகிறார்கள்?
அந்த வாரத்தில் ரிலீஸ் ஆன படம் தான் முக்கியமான விவாதமாக இருக்கும். அப்புறம், "அந்தப் பையனும் அவளும்" என்று ஆரம்பித்து, வகுப்பின் எல்லா மாணவர்க்கும் ஜோடி சேர்ப்பது அவர்களின் அக்கறையாயிருக்கும். வாத்தியார், டீச்சர், இவர்களைப் பற்றிய வம்புகளும், விகற்பமான கமெண்டுகளும் தாராளமாகவே வரும். இன்னும் கொஞ்சம் டிசென்ட் கூட்டமானால், சானியா, டோனி, என விளையாட்டுகளைப் பற்றிப் பேசுவார்கள். அல்லது, நமது அரசியலை ஒரு அலசு அலசுவார்கள்.
கல்லூரி இடைவேளைகளிலும், விடுதிகளிலும், மாணவர் பல காரியங்களைப் பற்றிப் பேசுவது நல்லதுதான். நாம் எந்திரப் பொம்மைகள் அல்ல. நமக்கும் உணர்வுகள் உண்டு. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி நாம் பேசத்தான் வேண்டும். ஆனால், நமது பேச்சுக்களில் கட்டுப்பாடு வேண்டும். இல்லாவிடில், நாம் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
வள்ளுவர் சொல்கிறார்,
"யாகாவாராயினும், நாகாக்க, காவாக்கால், சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
- ஆம், நாம் மற்ற எதையும் காக்காமல் இருந்தாலும், நாவை - நமது பேச்சுக்களைக் காக்க வேண்டும். இல்லாவிடில், நமது வார்த்தைகளில் பிடிபட்டு, சோகத்தை நாம் அடைவோம்.
"மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் பலனைப் புசிப்பார்கள்" - நீதி 18 :21 .
ஆண்டவரின் பிள்ளைகளாக நாம் பிற மாணவர்களோடு நட்பு வைப்பது அவசியம். அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களைப் பற்றி அவர்களுடன் பேசுவதில் தப்பில்லை. படிப்பு, விளையாட்டு, நாட்டு நடப்பு, சமுதாயப் பிரச்சனைகள், இப்படி பல நல்ல காரியங்களைப் பற்றி நாம் பேச வேண்டும். ஆனால், ஆனால், நம்மைக் கறைப்படுத்தும் விசயங்களைப் பற்றி நாம் பேசி, நமது ஆன்ம வாழ்வினைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.
சங்கீதம் ஒன்று: ஒன்று நமக்கு நல்ல வழிகாட்டி. எங்கு நாம் நடக்க, நிற்க, உட்காரக் கூடாது என்று தெளிவாய் இது சொல்கிறது. மற்றவர்களோடு நமக்கு உள்ள உறவு, "பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்" எனபது போல, அவர்களை நல்வழிப் படுத்துகிறதாக இருக்க வேண்டும். மாறாக, நமது அர்த்தமற்ற அரட்டைகள் நம் வாழ்வை "பன்றியோடு சேர்ந்த கன்றின்" கதையாக்கிவிடக் கூடாது. .
P ஜெபராஜ், UESI ஊழியர், சென்னை
Tuesday, September 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment