மாறும் கலாச்சாரம், மாறாத மதிப்புகள் !
P . ஜெபராஜ் , சென்னை
இன்றைய கலாச்சாரம்:
கலாச்சாரத்தின் மேல் மோகம் கொள்வது தவறில்லை. ஆனால் எந்த கலாச்சாரத்தின் மேல் மோகம் எனபது தான் கேள்வி. கலாச்சாரம் என்ற சொல் கலை ஆச்சாரம் - ஆம், 'கல்ச்சர்' என்ற இலத்தீன் மூலப் பதம், கலையை வளர்ப்பதில், 'கல்டிவேட்' பண்ணுவதில் இருந்து வந்தது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சந்ததிக்கும் தனித்தனி கலாச்சாரம் உண்டு.
நமது அறிவையும் குணத்தையும் வளர்க்ககூடிய கலாச்சாரத்தை ஏற்றுகொள்வது நல்லது. ஆனால் நமது நாட்டுக்கும் நமது கிறிஸ்தவ பண்புகளுக்கும் எதிரான கலாச்சாரத்தை பின்பற்றுவது நம்மை அழிக்ககூடியாதாக ஆகிவிடும்.
சரித்திரத்தில் "மாடெர்ன் ஜெனரேசென் " புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்தது. ஆனால் நாம் இப்போது கடந்து வருவது "போஸ்ட் மாடெர்ன் ஜெனரேசென்". இதன் விளக்கம் : Postmodern philosophy is a philosophical direction which is critical of the foundational assumptions and structures of philosophy. - Wikipedia, the free encyclopedia .
ஆம். அடிப்படை தத்துவங்களையே கேள்வி கேட்கும் தத்துவம் இது. இதன் உண்மைகளை பயங்கர விதமாக இந்த நாட்களில் நாம் காண்கிறோம்.
ராஜ்யத்தின் கலாச்சாரம்:
வேதத்தில் தேவன் தமக்கு என்று பரிசுத்தமான ஒரு மக்கள் கூட்டத்தை தெரிந்து கொள்கிறார். ஆரம்பத்தில் இது இஸ்ரவேல் மக்களை குறித்தது - உபாகமம் 7 :6 . கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பின் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரும் புதிய இஸ்ரவேலாக அழைக்கபடுகின்றனர் - ரோமர் 2 :29 ; 1 பேதுரு 2 :9 ,10. இந்த தெரிந்தெடுப்பின் முக்கிய நோக்கம், ஆண்டவரின் மக்கள் அவருக்காக பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்பதே. மற்றவர்களின் தவறான பழக்க வழக்கங்களை விட்டு, ஆண்டவருக்காக வாழ வேண்டும். நாம் தேவ ராஜ்யத்தின் மக்கள் - Kingdom People - இந்த உலகத்தின் தவறான கலாச்சாரங்களைப் பின் பற்றக்கூடாது. நமது ராஜ்யத்தின் கலாச்சார போதனைகள், மத்தேயு 5 -7 அதிகாரங்களில் உள்ள மலைப் பிரசங்கத்தில் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது. . இதில் திரும்பத் திரும்ப வரும் சொற்றொடர், '...பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டது. நான் உங்களுக்கு சொல்லுகிறேன்...' என்பதாகும். ஆம், கிறிஸ்து நமக்கு முற்றிலும் புதிதான கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
கிறிஸ்தவ கலாச்சாரமா?
கலாச்சாரம் மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. மாறும் கலாச்சாரத்தை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது.பல நேரங்களில் மேற்கத்திய கலாச்சாரத்தை நாம் கிறித்தவ பண்புகளோடு குழப்புகிறோம். எனவே தான் குடிப்பதும் நடனமாடுவதும் தான் கிறித்துவம் என பிறர் எண்ணுகிறார்கள்.அல்லது முதல் நூற்றாண்டு யூத கலாச்சாரங்களை அவற்றின் பின்னணி தெரியாமல் பின்பற்ற, பிறர் மேல் திணிக்க முயலுகிறோம். இதனால் தான் பல சபைகளில், ஐக்கியங்களில் குழப்பங்கள் ஏற்படுகிறது. வேத போதனைகளை அவற்றின் கலாச்சார, சரித்திர பின்னணியுடன் படித்து நாம் பின்பற்றவும் போதிக்கவும் வேண்டும். இப்படிப்பட்ட சில பழக்கங்களைக் குறித்து பவுல் சொல்லும் போது, பிறரை அற்பமாய் எண்ணாமலும் குற்றப்படுத்தாமலும் இருக்க வேண்டும் என்கிறார் - ரோமர் 14 : 3. இவைகளை வாதினால் தீர்மானிக்க முடியாது - 1 கொரிந்தியர் 11 : 16. பிரசங்கி 11 :9 , வெளி. 22 : 11, 12 சொல்கிறது, நீ விரும்புவதை எல்லாம் செய்யலாம், ஆனால் அதற்கான பலன் - தண்டனை வருகிறது!
கல்லூரி கலாச்சாரம்:
"ஹேய் மச்சி" "வாடி கண்ணு" என்ற வார்த்தைகள் சென்னை முதல் குமரி வரை கல்லூரி வளாகங்களில் நாம் தினமும் கேட்கும் வசனங்கள்.. பள்ளிப் படிப்பு வரை பெட்டிப் பாம்பாக இருந்த குக்கிராம மாணவனும் கல்லூரி வந்ததும் உருத்தெரியாமல் மாறி விடுகிறான். எப்படி? அவன் கல்லூரியில் கண்ட கலாச்சாரத்தைபின் பற்றுவதாலேயே. புகைப்பது, குடிப்பது, தவறான உறவுகள் என்பவை தான் கல்லூரி கலாச்சாரம் என தவறாக புரிந்து கொள்கிறான் . 'பாய் பிரெண்ட்' / 'கேர்ல் பிரென்ட்' வைத்துக்கொள்வது தான் கல்லூரி கலாச்சாரம் என்று பல மாணவர் நினைக்கிறார்கள். சினிமா உலகமும், சின்னத்திரையும் இதைத்தான் காண்பிக்கிறது. இப்படிப்பட்ட பழக்கங்களினால், நட்புகளால் பாழடைந்த படிப்புகள் எத்தனை! வந்து சேர்ந்த வேதனைகள் எவ்வளவு! நடந்த தற்கொலைகள் / கொலைகள் எத்தனை! பெற்றோரின் கடின உழைப்பினால் கல்லூரிக்கு வந்த மாணவர், படிக்காமல், காதலிப்பது தான் கல்லூரி கலாச்சாரம் என்ற கானல் நீரின் பின்னால் போனதால் வடிக்கப்பட்ட கண்ணீர்கள் எவ்வளவு! புது உறவின் கலாச்சாரம்!
ஆண் பெண் உறவுகளை எடுத்துக்கொள்வோம். இதில் தமிழரின் பாரம்பரிய கலாச்சாரம் போற்றத்தக்கது. ஆண் பெண் உறவு நெருப்பும் பஞ்சும் போன்றது என்பார்கள். ஆனால் காலப்போக்கில் இவை மாறி விட்டது. நல்ல எண்ணத்தோடு எல்லோரோடும் பொதுவாக நட்பு கொள்வதில் தப்பில்லை. ஆனால், குறிப்பிட்ட பிறபாலரோடு நட்பு வளர்ப்பது படிப்பையும் வேலையையும் கெடுக்கும். மேலை நாடுகளில் போல் தாராளமான உறவுகள் கொள்வதால் குடும்ப உறவுகளே பாதிக்கப்படுகிறது. இதுவரை இல்லாத விதத்தில் விவாக ரத்துகள் பெருகிவருகிறது.
சற்று முன்பு நம் நாட்டில் ஓரின சேர்க்கை தவறு அல்ல என தீர்ப்பு வந்தது. 2010 மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட், திருமணத்திற்கு முன் பாலுறவு கொள்வதும், திருமணம் இல்லாமல் இணைந்து வாழ்வதும் தவறு இல்லை என்று கூறி இருக்கிறது நாம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம்? கட்டுப்பாடே இல்லாத உறவுகள் நம்மை எங்கே கொண்டு விடும்? விலங்குகளை விட மோசமான நிலைமைக்கு போய்விடுவோம்.
இதில், எல்லா சமுதாயத்திலும் ஆண்கள் தப்பி விடுவார்கள். யோவான் 8 :3 வசனத்தில் 'கையும் மெய்யுமாக' பிடிக்கப்பட்ட சூழலில் அந்த ஆண் எங்கே போனான்? பெண்ணை மட்டும் தான் மதவாதிகள் பிடித்து தண்டிக்கத் துடித்தார்கள்.பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்புக்கு போகிறார்கள். அல்லது கட்டுப்பாடு இல்லாத உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் குப்பைத் தொட்டிகளில் போடப்படுகிறார்கள். அல்லது மேலை நாடுகள் போல் "சிங்கிள் மதர்ஸ்" இங்கும் வரலாம். ஆனால் மேலை நாடுகளின் "சிங்கிள் மதர்ஸ்" மற்றும் அவர்களின் குழந்தைகள் சமுதாயத்தில் படும் பாடுகள் ஏராளம். நம் பழமொழி சொல்வது போல 'அப்பன் பேர் தெரியாத பிள்ளை' எனும் அவச்சொல்லுக்கு ஆளாகிறார்கள். வேதபோதனைக்கு விரோதமான உறவுகள் தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் பேரழிவைக் கொண்டுவரும்.
பகட்டு உடைகளின் கலாச்சாரம்:
உடையை எடுத்துக்கொள்வோம். நல்லவிதமாய் உடுத்துவது அவசியம். ஆனால் பிறபாலரைக் கவருவதற்காக, பேஷன் என்ற பெயரில் நாம் போடும் வேஷங்கள் எத்தனை! இதற்காக விரயமாக்கப்படும் பணம் எவ்வளவு! நடிகைகள் மற்றும் திரைப்படங்களின் பெயரால் வரும் சுடிதார்கள் / சேலைகள் வாலிப பெண்களை எப்படி கவருகிறது! அவற்றின் விலை அதிகமானாலும், பெற்றோரிடம் அடம் பிடித்து வாங்கி விடுவார்கள். அதிக கவர்ச்சியாக உடை உடுத்தி அதன் காரணமாக கற்பழிக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் அழிந்த பெண்கள் பற்றி தினமும் செய்தி வருவது நமக்கு எச்சரிப்பு! மேலை நாடுகளில் குளிருக்காக போடப்படும் உடைகளை, பகட்டுக்காக கொளுத்தும் வெயிலில் போட்டு அவதிப்படும் ஆண்கள் எத்தனை பேர்! 'கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு' எனபது பழமொழி. ஆனால் ஒரே ஜீன்ஸ் பேன்ட்டை ஒரு மாதம் பெருமையாகப் போடும் மாணவர்கள் எத்தனை பேர்! நல்ல, கண்ணியமான உடைகளை நாம் உடுத்துவது அவசியமாகும்.
'ஸ்வைப்' கலாச்சாரம்! பொருளாதார நிலையிலும் மேலை நாடுகளின் கலாச்சாரம் நம்மை பாதிக்கிறது. திடீரென ஒரு கூட்டம் மக்களின் வருமானம் மிக அதிகமாகிவிட்டது. அந்த பணத்தை தேவை உள்ள மக்களுக்காக செலவிடுவது நல்ல காரியம் - ரோமர் 12 :8 , 13. ஆனால் பணத்தை வீணான உல்லாச கேளிக்கைகளில் விரயமாக்குவது புது கலாச்சாரமாக கருதப்படுகிறது. தன் பணபலத்தால் ஆடம்பரமாக வாழ்ந்து, ஏழையை கவனிக்காதவன் தவறான இடத்தில் தான் தன் தவறை உணருகிறான். ஆனால் அது ரொம்ப ரொம்ப லேட் ஆயிருச்சு - லூக்கா 16 :19, 25. எடுத்ததிற்கு எல்லாம் பெருமையாக swipe பண்ணி கிரெடிட் கார்டுகளால் கடனில் தவிக்கும் குடும்பங்கள் எத்தனை! பல பட்டதாரிகளும் இந்த வலையில் விழுந்து ஐக்கியத்தையும் ஊழியத்தையும் விட்டு தலை மறைவாகி விட்டார்கள். அடிக்கடி வரும் விளம்பரங்களுக்கு நாம் விலை ஆகிப்போகமல், Consumer Culture நம்மை பாதிக்காதவாறு காத்துக்கொள்ள வேண்டும்.
"Junk Food" பார்ட்டி கலாச்சாரம்:
'பிட்சா' ஒரு கையில், 'கோக்' அடுத்த கையில் எனபது கல்லூரி / MNC உணவு கலாச்சாரமாக கருதப்படுகிறது. எடுத்ததிற்கெல்லாம் 'பார்ட்டி' 'பார்ட்டி' என பாட்டு பாடுகிறோம். 'இன்று எவனை மொட்டை அடிக்கலாம்?' என்று மாணவர்கள் சுற்றி சுற்றி அலைவார்கள். பகட்டுக்காக, நம் உடல்நலத்துக்கு ஏற்காத 'ஜன்க் புட்' என அழைக்கப்படும் உணவுகளை நாம் உண்கிறோம். இதனால் நம் உடல்நிலை பாதிக்கப்படுகிறது."ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள்" - 1 கொரிந்தியர் 10 : 7 .
பார்ட்டிகளில், தேவையே இல்லாமல் ஆர்டர் செய்து, வீணாக்கப்படும் உணவு எவ்வளவு! உணவு பொருட்களை வீணாக்குவது இந்தியரால் சகிக்க முடியாத ஒன்று. ஆனால் மேலை நாடுகளில் இது சாதாரணம். அவர்கள் குப்பையில் கொட்டும் உணவெல்லாம் அனுப்பப்பட்டால், சொமாலியா, சூடான் போன்ற நாடுகளில் பட்டினிச்சாவுகள் இருக்காது. பண பெருக்கத்தினால், நம் நாட்டிலும் உணவை வீணாக்குவதை பெருமை ஆக நினைக்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. 'பசித்துப் புசி எனபது நம் நாட்டின் பழமொழி. ஆனால் பகட்டுக்காக ஒரு நாளில் ஐந்து, ஆறு முறை ஓட்டல் செல்வது சிலரின் பெருமை. உலகின் ஒரு பக்கம் மக்கள் உணவு இல்லாமல் செத்துக்கொண்டு இருக்கும் போது, உணவை வீணாக்குவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். கல்லூரி, MNC பார்ட்டிகளில் தகாத உறவுகளும் உருவாகிறது. இதனால் அநேகரின் குடும்பங்களும் உடல்நிலையும் சீர் குலைந்து வருகிறது.
அடிமைப்படுத்தும் கலாச்சாரம்:தகாத சில பழக்கங்களை புது கலாச்சாரம் என நினைப்பது அறிவல்ல. உதாரணத்துக்கு, குடிப்பழக்கத்தை எடுத்துக்கொள்வோம். சில மேலை நாடுகளில் குளிர் அதிகம். அங்கு கொஞ்சம் குடிப்பது அவர்களின் பழக்கம். ஆனால் நம் நாட்டில் இப்போது குடிப்பது எனபது சாதாரணமாக எல்லோரும் பழகி விட்ட ஒன்று ஆகிவிட்டது. கல்லூரிகளிலும் கார்பரேட்களிலும் வீக் என்ட் பார்ட்டிகள் புகைக்க, குடிக்க பலரை ஏவுகிறது. 'குடி குடியைக்கெடுக்கும்,குடிப்பழக்கம் உடல் நலத்தைக்கெடுக்கும்', 'புகைப்பது உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கும்' என,மிகமிகச் சிறிய எழுத்துக்களில் மதுபான புட்டிகளிலும் சிகரெட் பாகெட்களிலும் அச்சிட வைத்தாலும், அவற்றை தயாரிக்க, விற்பனை செய்ய அரசு தடை விதிப்பதில்லை. இவற்றின் மூலம் அரசுக்கு வரும் வருமானம் தான் அரசின் அக்கறை.
கல்லூரி / அலுவலக பார்ட்டியில் "மச்சு ஒரு 'சிப்' தாண்டா. சும்மா டிரை பண்ணு" என நண்பன் அழைக்கும் போது தடுமாருகிரோமா? இப்படி ஆரம்பித்த எத்தனை பேர் மொடாக்குடியர்களாய் மாறி விட்டார்கள். இதுபோலவே புகைப்பது, போதை மருந்து எடுப்பது எனும் பழக்கங்களும் மாணவ கலாச்சாரம் என்று தவறாக நம்பப்படுகிறது. இவர்களின் படிப்பும், வேலையும், குடும்பமும் எப்படி சிதைகிறது.
நமது கலாச்சாரம்:
"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." - ரோமர் 12 : 2. நம்மைச் சுற்றி மாறிவரும் கலாச்சாரத்தை நாம் தேவனின் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். நம் கிறிஸ்தவ நடக்கைகளுக்கு ஒத்துப்போகிற செயல்களை நாமும் பின்பற்றலாம். ஆனால் அதற்கு எதிரான செயல்களை நாம் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் செய்வதை எல்லாம் நாம் பின் பற்ற வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. புதிய பழக்ககங்கள் நமக்கு தகுதியானவையா, நமக்கு பயனானவையா என்று ஆராய்ந்து பின்பற்ற வேண்டும். பவுல் இதனை இரு அருமையான வசனங்களில் கூறுகிறார்:
"எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு. ஆயினும் எல்லாம் தகுதியாயிராது...நான் ஒன்றிற்கும் அடிமைப்பட மாட்டேன் ...எல்லாம் பக்தி விருத்தியை உண்டாக்காது " - 1 கொரிந்தியர் 6 :12 ; 10 :23 .
புதிதாக எது வந்தாலும் அவைகளை எல்லாம் நாம் எதிர்க்க வேண்டும் என்று கிடையாது. அவைகளை ஆராய்ந்து பார்த்து, நலமானவைகளை ஏற்றுக்கொள்ளலாம். வேத போதனைக்கு எதிரான கலாச்சாரத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல், அவைகளின் தீமை பற்றி நாம் சமுதாயத்துக்கு உணர்த்த வேண்டும். ஆம், பல நேரங்களில் நாம் சமுதாய பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் போய்விடுவோம். அது சரி அல்ல. பொது மேடைகளில் பேசியும, செய்தித் தாள்களில் எழுதியும் நாம் நமது மதிப்பீடுகளை தெரிவித்து சமுதாயத்திற்கு நல்ல செயல்களைக் கற்றுக் கொடுக்கலாம். ஆண்டவர் நம்மை பூமிக்கு உப்பாகவும், உலகத்துக்கு வெளிச்சமாகவும் இருக்கும் படி அழைத்திருக்கிறார் - மத்தேயு 5 :13 , 14 . . "நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச்செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்." - 1 கொரிந்தியர் 10 : 31.
ஆசிரியர்,சென்னையை மையமாக வைத்து நமது தேசிய UESI சபை தொடர்பு மற்றும் சமுதாய கரிசனைகள் துறைகளின் செயலராக பணிபுரிகிறார்.
pjebarajuesi @hotmail .com