"பட்டணத்துப் பறவைகள்"
சென்னைப் பட்டணத்துல குந்திக்கினு, பறவையப் பத்தி என்னாத்த நினைககிறது? எழுதுறது? இங்க மனுசனுக்கே இருக்க இடமில்லே! கொடக்கூலி கூடிக்கினே போது. சொந்தமா ஒரு குடிசயப் போடலாமுன்னாலும் எடமில்லே.காரபரேசன்காரன் வந்து பிச்சிப் போட்டுறான் . இத்துலே பறவையப் பத்தி நெனைக்க முடியுமா?
ஆனா, இந்தப் பட்டணத்திலும் ஒருசில பறவைகள் இருக்கத்தான் செய்யுது.கொஞ்சம் கண்ணத் தொறந்து அவைகளைப் பாக்கலாம். "ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்" அப்படின்னு ஏசுநாதர், காந்திஜிக்கு பிடித்தமான மலைப் பிரசங்கத்திலே சொல்லியிருக்கிறாரு.
காக்கா தான் எல்லா இடத்திலேயும் இருக்கும். பாட்டிகிட்டே வடையைத் தூக்கினு போனமாரி, நம்ப கொஞ்சம் அசந்தா கையில இருக்கிறதையும் இந்தக் காக்கா புடிங்கிட்டுப் போயிரும். "காக்கையப் பாரு,கூடிப் பிழைக்கும் " அப்படின்னு பாட்டு எழுதி வச்சிருக்கான். நம்மளும் அண்டை வீட்டுக்காரனிடம் சண்டை போடாமல் ஒத்துமையாய் வாழனும். நம்மளும் இருக்கிறதை நாலு பேருக்கு கொடுத்து சாப்பிட்டால் நல்லது. "காக்கை குருவி எங்கள் ஜாதி" ன்னு பாரதியாரும் பாடினாரு. நம்ம ஜாதி வித்தியாசமெல்லாம் பாக்காம எல்லோரோடையும் நல்லாப் பழகணும். வியாபாரம் நல்லா நடக்கனுமினு காலங்காத்தாலே காக்காயிக்கு தின்பண்டம் போடுற ஆளு உண்டு. அது தப்பில்லே. நாம "எச்சிக் கையால் காக்கைய விரட்டாத" ஆசாமியா இருக்கக் கூடாது. ஆனால் அதை விட முக்கியம் நாம் , பசியாயிருக்கிற ஆட்களப் பார்த்து சாப்பாடு கொடுக்கணும். அது நல்லது.
சிட்டுக் குருவியும் நம்ம ஊருலே இருக்கு. அடைக்கலான் குருவின்னும் இத்தை சொல்வாங்க. இது 'கீச்' 'கீச்' ன்னு நல்லா சத்தம் போடுறதை கேட்க நல்லாயிருக்கும்."சின்ன சிட்டுக் குருவியே,சின்ன சிட்டுக் குருவியே, உன்னை சந்தோசமாப் படைச்சது யாரு?" அப்படின்னு எஸ்தர் பேபி அம்மா பாட்டு எழுதினாங்க.ஆமாம். இந்தக் குருவிய போஷிக்கிற ஆண்டவர் நம்மோட தேவைகளையும் கட்டாயம் சந்திப்பார். வீட்டுலே சின்ன எடம் கிடைச்சா குருவி கூடு கட்டிரும். சோதனைய எப்படி ஜெயிக்கிரதுன்னு இதை உதாரணாமாய் சொல்லுவாங்க. "நம்ம தலைக்கு மேல குருவி பறக்கிறதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அது நம்ம தலையின் மேலேயே உட்கார்ந்து, கூடு கட்டுறதை நம்மால் தடுக்க முடியும்". ஆம், நமக்கு பல பல சோதனைகள் வரும்போது ஆண்டவர் பெலத்தினால் அது நம் தலையில் கூடு கட்டவிடாமல் ஜெயிக்க வேண்டும்.
எங்க பட்டனத்தில வேப்பம் பழம் பழுத்தால் கிளி கூட்டம் கூட்டமாய் வரும். அதை பார்க்கவே அழகாக இருக்கும். பச்சையான உடம்பு, சிவப்பான வாய் - இதப் பாத்தும், படச்சவரை துதிக்காமல், எல்லாம், தானே வந்துச்சின்னு ஆராய்ச்சி பண்ணி எழுதுறாங்களே, அதை என்னா சொல்றது? என்னாத்துக்கு கிளி கிளியாகவே ஆயிரம் ஆயிரம் வருசமா இருக்கு? அது ஏன் ஒரு பருந்தாய் மாறல்லே? என்னா பரிணாமமோ, எனக்கு அது விளங்கலை.
ராத்திரி நேரம் ரோட்டு மேல பெருச்சாளிய அடிச்சிப் போட்டுடுறான் . ராவோட வர்ற ஆந்தை அதை தூக்கின்னு போயிருது. இல்லாட்ட வானத்தில பறக்கிற கழுகின் கண்ணுக்கு அது தெரியுது. கழுகு ராக்கெட் மாதிரி பாய்ஞ்சு வந்து லபக்குனு பெருச்சாளிய தூக்கிட்டுப் போயிருது. அதால் தான் ஆந்தை,கழுகு, காக்கை இதெல்லாம் 'scavenger பறவைகள்' அப்படின்னு பாடப் புத்தகத்திலே எழுதியிருக்கு. நம்மளும் இந்த சமுதாயத்திலே இருக்கிற அசுத்தத்தையும் அசிங்கத்தையும் நம்மாலே முடிஞ்ச வரை சுத்தப் படுத்தனும். தப்பு நடக்கிறப்ப கண்டுக்காம போறது நமக்கு நல்லதில்லை.
எப்போயாவது ஒருவாட்டி தென்னை மரத்திலோ, வேப்பமரத்திலோ குயில் உட்கார்ந்து இனிமையாய் பாடும். பாக்க அது காக்கா மாதிரித்தான் இருக்கும். வால் நீளமாய் இருக்கும். ஆனால் அதின் கண்ணு சிவப்பாய் ரத்தினம் மாதிரி இருக்கும். தன்னை உண்டாக்கினவரை நினைத்து குயில் அழகாய்ப் பாடுது. நம்மை படைத்த ஆண்டவரை நாம நினைக்கிறோமா? அவரைத் துதிக்கிரோமா? அவருக்குப் பிரியமாய் நடக்கிறோமா?
அப்புறம் பட்டணத்திலே கோழியை கசாப்புக் கடையிலே தான் பார்க்கிறோம். இந்த இறைச்சிக் கோழிக்குப் பறக்கக் கூடத் தெரியாது. இதன் ஒரே வேலை நல்லாத் தின்னுபுட்டு, சாகிறதுதான். அப்படியும் சிலர் இருக்கிறாங்க. அவங்க வேலையே சாப்பாடும் குடியும் தான். கமலேசன் அண்ணன் சொல்லுவாரு,"வெந்ததைத் தின்று,வெறுமனே வாழ்ந்து,விதிவந்தால் சாவது". நம்ம அப்படி இருக்கக் கூடாது. நாம நமக்கும் மற்றவங்களுக்கும்
பிரயோசனமான வாழ்க்கை வாழனும்.
ஏசுநாதர் சொன்னாரு, அவர் கடவுளாக இருந்தும், எதற்காக மனுசனாக வந்தாருன்னு, "நானோ அவைகளுக்கு (நமக்கு) ஜீவன் (வாழ்வு) உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் (நிறைவு அடையவும்) வந்தேன்". ஆமா, நம்ம நல்லா இருக்கனுமின்னு ஆண்டவர் சிலுவையிலே தன்னையே பலியாகக் கொடுத்தாரு. அவரை நம்பி மனசுலே ஏத்துக்கிட்டு அவரைப் போல வாழ்ந்து மத்தவங்களுக்கு ஆசிர்வாதமா இருப்போம்.
ஜெசி,சென்னை
--