Tuesday, July 20, 2010

கூண்டுக் கிளியா , விடுதலைப் பறவையா?

கூண்டுக் கிளியா , விடுதலைப் பறவையா?

 "நாங்கள் ஊருக்குப் போகிறோம். எங்கள் கிளியை ஒரு வாரம் பார்த்துக்கொள்ளுங்கள்" 

சரி என்று அந்தக் கிளியை வீட்டில் வைத்திருந்தோம். சின்னக் கூட்டில் அடைபட்டு கிடந்ததது அந்த கிளி.வகை வகையாய் உணவுகள் கொடுத்தாலும் கடமைக்காக அது உண்ணும். சிறகுகள் வெட்டப்பட்டு, பறக்க முடியாமலும், பறக்க இடம் இல்லாமலும் கூண்டுக்கு உள்ளேயே தவ்விக்கொண்டு இருந்தது. எப்போதாவது தான் அது சத்தம் போடும். அதன் நிலைமை பரிதாபமே! 

எங்கள் வீட்டுக்கு முன்பாக உள்ள வேப்ப மரம் பழத்தால் நிறைந்தது. பல கிளிகள் அதில் வந்து பழம் தின்னும். எத்தனை மகிழ்ச்சி! எத்தனை உற்சாகமான பாடல்கள்! எவ்வளவு வேகமாய் அவை பறக்கின்றன! 

கூண்டுக் கிளிக்கும் சுதந்திர பறவைகளுக்கும் எவ்வளவு வேறுபாடு! 

 நான் கூண்டுக் கிளியா? அல்லது சுதந்திரப் பறவையா? 

 பல நேரங்களில், பற்பல சூழல்களில் கூண்டுகளை நாமாகவே உண்டாக்கிக் கொள்கிறோம். அது ஒரு தேவை இல்லாத பழக்கமாய் இருக்கலாம். விளையாட்டாய் பள்ளியில் அல்லது கல்லூரியில் ஆரம்பித்த அந்தப் பழக்கத்தை விட முடியாமல் நாம் தவிக்கலாம். அது புகையாகவோ, குடியாகவோ, வேறு போதைப் பொருளாகவோ இருக்கலாம். அல்லது அது நாம் பிணை பட்டுள்ள ஒரு உறவாக இருக்கலாம். நட்பு என்றோ, அண்ணன் தங்கை என்றோ ஆரம்பித்து, தவறான உருவெடுத்த உறவாக இருக்கலாம். 

இன்று அது நம்மை கூண்டுக்குள் தள்ளி இருக்கலாம். உலகத்துக்கு நாம் உத்தமனாய் இருக்கலாம். நம் பக்தி வேஷம் பலரைக் கவரலாம். ஆனால் தனியாக இருக்கும் போது தான் நம் சுய உருவம் வெளிப்படும். நம் மனதில் தோன்றும் அருவருப்புகள் எவ்வளவு! 

 அசுத்தமான அந்த தொலைக் காட்சியும், ரகசியமாய் நாம் காணும் web sites ம் நம்மைக் கறைப் படுத்துகிறதா?
 தவறு என்று தெரிந்தும் அதை விட முடியாமல் தவிப்பா? 
விரக்தியாய் வாழ்வையே வெறுக்கும் நினைவுகளா? ஆனந்தமாக விண்ணில் பறக்க வேண்டிய நாம் சிறகு ஒடிந்த பறவையாய்க் கிடக்கிறோமா? 
உயரத்தில் பறக்க வேண்டிய கழுகு, கோழிக் குஞ்சு போல் குப்பையைக் கிளருகிறதா? விடுதலைப் பறவையாய், மற்றோருக்கு விடுதலை அருளின இயேசு கிறிஸ்து யோவான் நற்செய்தி 10 : 10 ல் சொல்கிறார்,

 " திருடன் (சாத்தான்) திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாகவும், அது பரிபூரணப் படவும் வந்தேன்." 

 ஆம், நாம் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ இந்தக் கிறிஸ்துவிடம் நம் வாழ்வைக் கொடுப்போம். 

 P ஜெபராஜ், சென்னை pjebarajuesi@hotmail.com

No comments: